”மன்னார்” திருக்கோவில்கள்
கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு, வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்” என்றழைக்கப் படுகிறது.
தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.
“ஸ்ரீ வில்லிபுத்தூர்” – ஆண்டாள் ஆலயத்தில் மூலவர் ‘ரங்க மன்னார்’.
பெரியாழ்வாரும், நாச்சியாரும் அவதரித்த திருத்தலம். ரங்க மன்னாரின் இரு மருங்கிலும் நாச்சியாரும், கருட பகவானும் காட்சி தருகின்றனர்.
மங்களாசாஸனம் பெற்ற இத்தலம் குறித்து அனைவருமே நன்கறிவர்.
“மன்னார் கோவில்” – இது குலசேகராழ்வாரின் அபிமானத்தலம். அவர்தம் திருவரசை (ஸமாதி) இங்கு காணலாம். நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சியிலிருந்து அம்பாசமுத்ரம் செல்லும் சாலையில் இவ்விண்ணகரம் அமைந்துள்ளது.
“காட்டுமன்னார் கோவில்” - இது சோழவள நாட்டில் அமைந்துள்ளது.
‘காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த...’
ஸ்ரீமந்நாத முனிகள் அவதரித்த திருத்தலம் இது.
“ராஜமன்னார் குடி” - ஹரித்ரா நதிக்கரையில் ஒரே வஸ்த்ரத்தை அரையில் ஆடையாகவும், சிரசில் தலைப்பாகையாகவும் அணிந்துகொண்டு ஒய்யாரமாக
கோபிலர், கோப்ரளயர் ஆகிய முனிவர்களுக்குக் காட்சி தந்த திருக்கோலம்.
இது ஸ்வாமி மணவாள மாமுனிகளின் அபிமானத்தலம். பேரறிஞர் பலர் வாழ்ந்த ஊர். ‘மன்னார்குடி மதிலழகு’ என்று கொண்டாடும் பெருமை படைத்தது.
“மேலப்பாவூர்” – ‘பாகூர் ராஜகுலராம சதுர்வேதி மங்கலம்’ என்பது கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர்.
ப்ருகு, மார்க்கண்டேய முனிவர்களுக்குக் காட்சி தந்த திருக்கோலம்.
மூலவர் “அழகிய மன்னார்”. மேற்குப் பகுதியில் அமைந்த இவ்வாலயம் ‘மேற்குத்தளி’, ‘மேற்கு விண்ணகரம்’ என்னும் பெயர்களைக் கொண்டது.
பிற்காலப் பாண்டிய மன்னர்களின் திருப்பணி.
கண்ணபிரான் யதுகுலத்தில் தோன்றி, கோகுலத்தில் வளர்ந்தருளினான்.
ஆநிரை மேய்த்தாலும் அரசர்க்குரிய காம்பீர்யம் சற்றும் குறையவில்லை.
அடியவர்கள் ‘ராஜ கோபாலன்’ என்றழைத்து இன்புற்றனர்.
இது போன்று வெளியுலகம் அறிந்திராத ஒரு சில மன்னார் கோவில்கள்
இன்னும் இருக்கலாம்.